Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

Thirumanthiram

பாடல் எண் :1.41

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குற் பனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே

பொழிப்புரை

சிவனை மறந்து நெடுநாள் வாழவேண்டுமென்னும் கெடு நினைவால் மாலுற்று மாலைத் தலைமையாகக் கொண்டு பாலுற்ற பிறவிக் கடலைக் கடைந்தனர் தேவர். அப்பொழுது சிவனை மறந்த பெரும் பிழை, பொருவருஞ் சினத்துப் பெருநஞ்சாக வெளிப்பட்டது. அதன் வெப்பம் பொறுக்காது தேவர்கள் மாலுள்ளிட்டாரனைவர்களும் ஓட்டம் எடுத்தனர். சிவன்பால் வந்து ஓலிட்டனர். சிவனும் பிழை பொறுக்கும் பெரியோனாதலின் பிழை பொறுத்து அந் நஞ்சினை உண்டு கண்டத்தடக்கினன். தேவர்கட்கு அமிழ்து ஈந்து காத்தனன். அத்தகைய முதல்வனைத் திருத்தப்பட்ட மனத்தின்கண் தொழுதற்கு வல்ல தொண்டர்க்கு, உலகுயிர் எல்லாம் படைத்து வளர்த்தருள் கன்னியாகிய அம்மையை ஒருபக்கத்தேயுடைய சிவபெருமான் அப்பொழுதே தன் இனத்தை நாடும் மான்போன்று அவர்களுடன் இணங்கி நின்றருளினன்.

Powered by WordPress.com.

%d bloggers like this: