மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள்

உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்றுணர மாட்டீர்

அற்றமே லொன்றறீயீர் அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே.

  1. மதி இலா – தத்துவஞானமில்லாத
  2. மானிடங்காள் – மனிதர்களே
  3. மற்றும் – (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
  4. ஓர் தெய்வம் – (சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம்
  5. உண்டே – உண்டோ? (இல்லை)
  6. நீங்கள் – நீங்கள்
  7. உற்ற போது அன்றி ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்)
  8. ஒருவன் என்று – (நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை
  9. உணரமாட்டீர் – அறியமாட்டீர்கள் (நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே) மேல் (பதப்பொருளுக்கு) மேற்பட்ட
  10. அற்றம் – மறைபொருளை (தாத்பரியத்தை)
  11. ஒன்று அறியீர் – சிறிதும் அறியமாட்டீர்கள்;
  12. அவன் அல்லால் – அந்த எம்பெருமான் தவிர
  13. தெய்வம் இல்லை – (சரணமடையக்கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்)
  14. கன்று இனம் மேய்த்த எந்தை – கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
  15. கழல் இணை – இரண்டு திருவடிகளையும்
  16. நீர் பணிமின் – நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.