வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
- மனிசர் தாம் – மநுஷ்யர்கள்
- வேதம் நூல் – வேதசாஸ்திரத்திற்படியே
- நூறு பிராயம் புகுவரேலும் – நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
- பாதியும் – அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
- உறங்கி போகும் – உறக்கத்தாலே கழியும்;
- நின்ற இப்பதினையாண்டு – மிகுந்த ஐம்பது வருஷம்
- பேதை – சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
- பாலகன் – ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் அது ஆகும் – நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும்
- பிணி – வியாதிமயமாயும்
- பசி – ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
- மூப்பு – கிழத்தனமாயும்
- துன்பம் – மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
- ஆதலால் – இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
- பிறவி – ஜந்மத்தை
- வேண்டேன் – விரும்புகிறேனில்லை.